வாட்டர் சர்வீஸ் மையங்களில் குவிந்த வாகனங்கள் - காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
ஆயுத பூஜையையொட்டி புறநகர பகுதிகளில் வாகனங்கள் சுத்தம் செய்யும் வாட்டர் சர்வீஸ் மையங்களில் ஏராளமான வாகனங்கள் குவிந்து வருகின்றன.
Update: 2023-10-23 08:27 GMT
கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர். இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது.ஆயுத பூஜையை முன்னிட்டு பெரிய,சிறிய தொழில் நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மலர்கள்,வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் வாகனங்களை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.இந்த நிலையில் ஆயுத பூஜையையொட்டி கோவை புறநகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சுத்தம் செய்யும் வாட்டர் சர்வீஸ் மையங்களில் ஏராளமான வாகனங்கள் குவிந்துள்ளன.குறிப்பாக அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாகனங்கள் சுத்தம் செய்யும் மையங்களில் ஏராளமான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் குவிந்து உள்ளதால் சுமார் 4 மணி நேரம் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுதவிர பழங்கள்,பூக்கள் விற்பனையும் சந்தைகளில் சூடுபிடித்துள்ளது.