கடன் தொல்லை: நிதி நிறுவனத்திற்கு ரூ.1லட்சம் அபராதம்

வாங்காத கடனை திருப்பி செலுத்த கூறி தொல்லை அளித்த நிதி நிறுவனத்திற்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-12-22 12:40 GMT

கடன் தொல்லை

கோவைபுலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம்.இவர் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மடிக்கணினி, தொலைக்காட்சி உள்ளிட்டவை வாங்கியுள்ளார்.

கடன் தவணைகளை முறையாக செலுத்தி முடித்த இவர்  தடையில்லா சான்றிதழையும் பெற்றுள்ளார். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு வங்கி கடன் வழங்கியுள்ளது.

அப்போது அப்துல் கரீம் கடன் வாங்க விண்ணப்பித்துள்ளார்.  அந்த விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி கடன் வழங்க மறுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்தினரிடம் விசாரித்த போது பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தில் ஒரு இலட்ச ரூபாய் தனி நபர் கடன் அப்துல் கரீம் வாங்கியுள்ளதாகவும் அந்த கடனை முறையாக செலுத்தாத காரணத்தினால் கடன் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிபில் ஸ்கோர் குறைந்து இருப்பதால் இனி எந்த நிறுவனத்திலும் கடன் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.அப்துல் கரீம் கடன் வாங்கவோ அதற்காக விண்ணப்பிக்காத நிலையில், எப்படி தன் பெயரில் கடன் வந்தது என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திடம் சென்று அவர் விசாரித்த போது முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் கடனை செலுத்த கோரி பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

வாங்காத கடனை கட்ட முடியாது என அவர் கூறிய நிலையில் அவரது வீட்டிற்கு சென்று கடனை செலுத்துமாறு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளனர்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்துல் கரீம் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதனை அப்துல் கரீமிற்கு வழங்குவதோடு வழக்கு செலவிற்கு ஐந்தாயிரம் ஆயிரம் ரூபாய் தர வேண்டுமென உத்தரவிட்டது.

பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் அபராத தொகையை உடனடியாக தனக்கு வழங்க வேண்டுமெனவும் இல்லையெனில் நீதிமன்றத்தில் மேல் நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும் என அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News