காலாவதியான இனிப்பு விற்பனை பேக்கரிக்கு சீல்
தூத்துக்குடியில் காலாவதியான 10 கிலோ தின்பண்டங்கள் வைத்திருந்த பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது.
Update: 2024-04-05 02:58 GMT
தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச. மாரியப்பன் தலைமையிலான குழுவினா், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள பேக்கரியில் நேற்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, தயாரிப்புக் கூடம் சுகாதாரக் கேடு, ஈக்கள் தொல்லையுடன் இருந்தது. உரிய கணக்குகள், பயிற்சி விவரங்கள், பகுப்பாய்வறிக்கைகள், சமையல் எண்ணெய் பயன்பாடு குறித்த விவரங்கள் இல்லை. அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களுள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், காலாவதியான 3 கிலோ தேங்காய்த் துருவல், அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 3 கிலோ கேக், பிஸ்கட்டுகள், தப்புக்குறியீடுடன் பொட்டலமிடப்பட்ட சுமாா் 10 கிலோ தின்பண்டங்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். பேக்கரி தயாரிப்புக் கூடம் மிகுந்த சுகாதாரக் குறைபாட்டுடன் இருந்ததால், கடை உரிமத்தை தற்காலிக ரத்து செய்து, சீல் வைத்ததாக அலுவலா் தெரிவித்தாா்.