கலெக்டர் அலுவலக ரவுண்டாவில் கட்சி கொடிகள் கட்ட தடை
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ரவுண்டாவில் கட்சி கொடிகள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு மிகவும் நெருக்கடியான பகுதியாகும். இதை அடுத்து மிகப்பெரிய ரவுண்டானா அந்த பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த ரவுண்டானா அமைத்த பின் கலெக்டர் அலுவலக சந்திப்பில் நெருக்கடி குறைந்தது. மேலும் நகரின் மிகப்பெரிய அடையாளமாகவும் இந்த ரவுண்டானா மாறியுள்ளது. ரவுண்டானவை சுற்றி செயற்கை புற்கள் பதிக்கப்பட்டு கண்கவர் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் வருகை, கலெக்டர் அலுவலக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும் சமயங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த ரவுண்டானாவில் கொடிகள் கட்டி விடுகிறார்கள்.
ஒரு கட்சி கொடி கட்டியதை சுட்டிக்காட்டி மற்றொரு கட்சியினரும் கட்டுகிறார்கள். இவ்வாறு அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் கொடிகளை கட்டுவதால் ரவுண்டாவில் அழகு கெடுவதுடன், பிரச்சினைகளும் விடுகின்றன. இதை தடுக்கும் வகையில் தற்போது ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள் கொடிகளை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார். இதை மீறி ரவுண்டானாவில் கொடி காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.