ஜெகதாபியில் குளக்கரை உடைப்பு: மழை நீர் வெளியேறியதால் விவசாயிகள் தவிப்பு
ஜெகதாபியில் குளக்கரை உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேறியதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜெகதாபி ஊராட்சி வறட்சியான பகுதியாகும். இங்கு ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இப்பகுதியில் பெய்யும் மழையை தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பொரணி என்ற பகுதியில் இரண்டு குளங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தெற்கு குளத்தில் உள்ள வரத்து வாரியில், சிறிய தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தெற்கு குளத்தில் கரைகளை உடைத்து கொண்டு வாகனங்களில் கொண்டு சென்றுள்ளனர். பணிகள் முடித்த பிறகும் உடைத்த கரையை சரி செய்யாமல் விட்டு விட்டு வெளியேறி விட்டனர். தற்போது, பரவலாக பெய்து வரும் மழையால் தெற்கு குளம் நிரம்பிய நிலையில்,
கரையில் உடைப்பு ஏற்பட்டு இருந்ததால், தண்ணீர் வெளியேறி சென்றது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் மழை நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.