வாடிக்கையாளருக்கு ரூ.1.35 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக கூட்டுறவு நகர வங்கி 1,35,249 ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி வாலவிளையைச் சார்ந்த திவ்யா என்பவர் பெயரில் அவரது தந்தை கார்டியனாக இருந்து பணத்தை திருச்செந்தூரிலுள்ள கூட்டுறவு நகர வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
அதன் பின்னர் புகார்தாரர் மேஜர் ஆன பின்பு டெபாசிட் முதிர்வுத் தொகையை கேட்டு வங்கியிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் வங்கி டெபாசிட் முதிர்வுத் தொகை ரூபாய் 30,000 மட்டுமே தருவோம் என கூறியுள்ளனர்.
இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் டெபாசிட் முதிர்வுத் தொகை ரூபாய் 1,15,249 ஐ மனு தாக்கலான தேதி முதல் ஆண்டுக்கொன்று 6 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 1,35,249 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.