குமரியில் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்
குமரியில் இன்று சூறாவளிக்காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டதால், நாளை கடலுக்கு செல்ல விசைப்படகுகள் தயார் நிலையில் உள்ளன.
குமரியில் தேங்காபட்டணம், குளச்சல், முட்டம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகளும், ஆயிரக் கணக்கில் கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கடந்த 23 ம் தேதி கரை திரும்பின. கரை திரும்பிய விசைப்படகுகள் அந்தந்த மீன் பிடித்துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது.
இவர்கள் கிறிஸ்மஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ஜனவரி 2 ம் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் தென் தமிழக கடலோர பகுதியில் இன்று ஜனவரி 3 ம் தேதிவரை 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த 4 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து நாளை( வியாழக்கிழமை) முதல் விசைப்படகுகள் மீண்டும் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றன.