நாமக்கல்: கூட்டுறவு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் நாமக்கல் வட்டார அலுவலகத்தில் அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

Update: 2024-03-07 13:44 GMT

கூட்டுறவுதுறை பணியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருந்த 120 உதவியாளர்கள் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.12.2023 அன்று நடைபெற்றது.

எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான 240 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியான 117 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 96 பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

20 தேர்வர்கள் நடப்பாண்டில் கூட்டுறவு பயிற்சியில் சேர்ந்து பயின்று வருவதால் பயிற்சியினை நிறைவு செய்தவுடன், அவர்களுக்கு பணியமர்வு உத்தரவு வழங்கப்பட உள்ளது. பணியில் சேர்ந்துள்ள 96 பணியாளர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் நாமக்கல் வட்டார அலுவலகத்தில் அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதனை நாமக்கல் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் இணைப்பதிவாளர் விஜயசக்தி முகாமில் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சரகத் துணைப்பதிவாளர்கள், பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News