சிறந்த மாணவர்களாக உருவாகணும்...!

அரசு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

Update: 2024-01-10 09:51 GMT

அரசு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 ம் வகுப்பு பயிலும் 5388 மாணவர்கள் மற்றும் 6734 மாணவிகள் என மொத்தம் 12,122 மாணவ மாணவிகளுக்கு ரூ.5,84,55,040/- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர் துரைமுருகன் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 பள்ளிகளை சார்ந்த 2104 மாணவ மாணவிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது. முதலமைச்சர் உத்தரவின்படி விலையில்லா மிதிவண்டிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 12000 மாணவ மாணவிகளுக்கு இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காட்பாடி ஒன்றியத்தில் மட்டும் 18 பள்ளிகளை சார்ந்த 2104 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் ரூபாய் 1.10 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோது இந்த பகுதியில் ஒரே ஒரு பள்ளி மட்டும்தான் இருந்தது. அதன் பிறகு நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள 54 ஆண்டு காலத்தில் இந்த பகுதியில் மட்டும் 18 பள்ளிகளுக்கு மேல் கொண்டு வந்துள்ளேன் ஏற்கனவே காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கே.வி குப்பம் பகுதியையும் சேர்த்து இதுவரை 43 அரசு பள்ளிகளை கொண்டு வருவதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்.

இது மட்டுமின்றி காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் சட்டக் கல்லூரியும், நீதிமன்றமும் கொண்டு வந்துள்ளேன். பொதுமக்கள் குடியாத்தம் சென்று வட்டாட்சியரை சந்தித்து மனுக்களை அளித்து வந்த நிலையில், காட்பாடியிலேயே வட்டாட்சியர் அலுவலகத்தையும், சேர்க்காடு பகுதியில் பல்கலைக்கழகத்தையும், ஒரு கல்லூரியையும், 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டு வந்துள்ளேன். 60 -70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளியில் மாணவனாக நான் படித்தேன். ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, ஒழுக்கமுள்ள மாணவனாக படித்து முன்னேறியதால் ஒரு வழக்கறிஞராகவும், தற்பொழுது அமைச்சராகவும் உள்ளேன்.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பிற்காலத்தில் யாரேனும் என்னை போன்று அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனவே மாணவ மாணவிகள் அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்களாக திகழ வேண்டுமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News