கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை : அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கையில் ரூ.488.22 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2023-12-30 05:45 GMT

 கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை : அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டார். பூமி பூஜைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தமிழக முதல்வர் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திடும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

அதன்படி,  சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும், தேவையான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், சமையலறைக்கூடம், நூலகங்கள் மற்றும் மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோரிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 08 பள்ளிகளில் மொத்தம் ரூ.1271.88 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரளிக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.84.72 இலட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் திருப்புவனம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.297.60 இலட்சம்  மதிப்பீட்டில் 14 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.105.90 இலட்சம் மதிப்பீட்டில் 05 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் என மொத்தம் 03 பள்ளிகளில் ரூ.488.22 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  இக்கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிக்கும்படி ஒப்பந்தாரர்ளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பெரியகருப்பண் தெரிவித்தார்.  

Similar News