ஒரு மாதத்திலேயே பழுதான பைக் : விற்பனையாளருக்கு அபராதம்

வாங்கிய ஒரு மாதத்திலேயே பழுதான இரு சக்கர வாகனத்திற்கு புதிய இஞ்சின் மற்றும் 35,000 ரூபாய் இழப்பீடு ஆகியவற்றை இரு சக்கர விற்பனையாளர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2023-12-08 04:32 GMT

நுகர்வோர் நீதிமன்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை  சார்ந்த சர்மிளா என்பவர் சாத்தான்குளத்திலுள்ள இரு சக்கர வாகன விற்பனையாளரிடம் ஒரு யமஹா ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திலேயே வாகனத்தின் இஞ்சினிலிருந்து சத்தம் கேட்டதனால் மனுதாரர் அன்றைய தினமே புகார் தெரிவித்துள்ளார். எதிர்மனுதாரர் சாத்தான்குளத்திலுள்ள சர்வீஸ் ஸ்டேசன் மூலம் வாகனத்தின் சத்தத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து திருச்செந்தூரிலுள்ள சர்வீஸ் ஸ்டேசன் மூலம் வாகனத்தின் சத்தத்தை நிறுத்த மறுபடியும் முயற்சி செய்துள்ளார். சத்தத்தை நிறுத்த முடியாமல் போனதால் மனுதாரர் எதிர்மனுதாரரிடம் மேற்படி வாகனத்தை ஒப்படைத்து சென்று விட்டார்.

ஒரு மாதத்திற்கு மேலாகியும் வாகனத்தை சரி செய்து கொடுக்கவில்லை.  இதனால் மனுதாரர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாகனத்தின் உற்பத்தியிலேயே குறைபாடு உள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளான சர்மிளா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட  நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,  நமச்சிவாயம் ஆகியோர் பழுதான இரு சக்கர வாகனத்திற்கு புதிய இஞ்சினை ஒரு மாத காலத்திற்குள் மாற்றி கொடுக்க வேண்டும் என்றும், அதோடு மாற்றி கொடுக்கப்பட்ட புதிய இஞ்சினுக்கு வாரண்டியை புதுப்பித்து கொடுக்க வேண்டும் என்றும் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு  நஷ்ட ஈடு ரூபாய் 25,000; மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 35,000-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News