பைக்குகள் மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு
காவல் நிலையம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சேந்தமங்கலம் அருகே உள்ள ஆர்.ஜி. வலசு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் நவம்பர் 12ஆம் தேதி மதியம் 2:15- மணி அளவில் கரூர்- திண்டுக்கல் சாலையில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் தடா கோவில் பிரிவு அருகே வந்தபோது, அதே சாலையில் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் தாமரைச்செல்வன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், கதிர்வேல் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கதிர்வேலுக்கு தலை, இடது காலில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த கதிர்வேல் மனைவி ராஜம்மாள் வயது 58 என்பவர், இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் நாகராஜன், உயிரிழந்த கதிர்வேலின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர் தாமரைச்செல்வன் மீது நவம்பர் 13ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.