சேலத்தில் 42 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
சேலத்தில் 42 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிநடைபெற்று வருவதாக மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 42 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு உள்ளன என்று வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி கூறினார்.
வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழைக்கு பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும். அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.
மூக்கனேரியில் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தொலை நோக்கி மூலம் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார். காலையில் தொடங்கிய இந்த பணி மாலையில் முடிவடைந்தது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி கூறியதாவது:- ஈரநிலப்பகுதி, மற்ற நிலப்பகுதி என 2 வகையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடத்தப்படும். சேலம், ஆத்தூர் என 2 வனக்கோட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஈரநிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கி மாலையில் முடிவடைந்தது.
சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் வடக்கு, தெற்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூர் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சேர்வராயன் மலை, சூரியமலை, ஜருகுமலை, கஞ்சமலை, பாலமலை, நகரமலை ஆகியவற்றின் அடிவார பகுதிகள், அதன் அருகில் உள்ள குட்டைகள் மற்றும் மூக்கனேரி உள்ளிட்ட மொத்தம் 21 இடங்களில் தொலைநோக்கி மூலம் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டன.
இதே போன்று ஆத்தூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட தம்மம்பட்டி, கருமந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 42 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டன.
இதில் வன அலுவலர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது புதிய வகை பறவைகள் இருப்பது காணப்பட்டன.
மாவட்டத்தில் எத்தனை பறவைகள் உள்ளன, புதிய பறவைகள் வந்து உள்ளனவா? என்ற விவரம் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.