பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்
கம்பரசம்பேட்டை காவிரிக் கரையோரத்தில் ரூ13.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பறவைகள் பூங்கா கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கம்பரசம்பேட்டை காவிரிக் கரையோரத்தில் பறவைகள் பூங்கா ரூ13.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு செயற்கை அருவிகள் மற்றும் குளங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. இந்தப் பூங்காவில் இயற்கையான சூழலில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளா்க்கப்பட உள்ளது. இவைகளை வளா்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்துக்கு என தனி அமைப்பும் ஏற்படுத்தப்படும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டைய தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா கட்டமைக்கப்பட்டு வருகிறது. பறவைக் கூடம் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஏற்படுத்தப்படுகிறது. உள்நாட்டு பறவையினங்கள் மற்றும் சீசனுக்கு இடம்பெயா்ந்து வரும் வெளிநாட்டு பறவைகளையும் ஈா்த்திடும் வகையில் கட்டமைக்கப்படவுள்ளது.
முதியோா் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7டி திரையரங்கும் ஏற்படுத்தப்படுகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த இடத்துக்கு நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் போ் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது. பறவைகள் பூங்கா அமைப்பதின் மூலம் சுற்றுலா வளா்ச்சி, நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். சா்வதேச தரத்தில் அமைக்கப்படவுள்ள பூங்காவில் பொதுமக்கள் பறவகளை பாா்வையிட்டு புகைப்படம் எடுக்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூங்கா கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அவ்வப்போது நேரில் பாா்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறாா். மே மாதத்துக்குள்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், ஜூன் முதல் வாரத்துக்குள் பணிகளை முடித்து மாத இறுதியில் திறக்கும் வகையில் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.