கரூரில் பாஜக தீவிர பிரச்சாரம்
தமிழக முதலமைச்சர் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என கரூரில் செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, கோடங்கிபட்டி, பெருமாள்பட்டி, பொன் நகர், ராயனூர், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, அங்கு திரண்டு இருந்த பெண்கள், வேட்பாளர் செந்தில் நாதனுக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய செந்தில்நாதன், காங்கிரசும் திமுகவும் சேர்ந்து தான் கட்சதீவை தாரைவார்த்தது.காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர் கடந்த முறை ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் சாமி கும்பிட்டு விட்டு வெற்றி பெற்று சென்றவர், மீண்டும் இப்போது வாக்கு கேட்டு செல்கிறார்.
வெற்றி பெற்று இந்த தொகுதிக்கு இதுவரை என்ன செய்தார்? பாராளுமன்ற உறுப்பினரிடம் வெள்ளை அறிக்கை பெற வேண்டும் என தெரிவித்த அவர், தொகுதியில் மத்திய அரசு கொடுத்த நிதியில் கட்டப்பட்ட பாலங்களை தன்னுடைய முயற்சியால் கட்டியதாக பொய்யாக பேசி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஐந்து ஆண்டுகளாக கரூர் மாவட்ட மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத பாராளுமன்ற உறுப்பினர் தேவையா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களை படத்துடன் பொதுமக்களுக்கு காட்டி விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு சாமானியனாக தமிழக முதலமைச்சரிடம் கேட்கிறேன் என்று, எத்தனை காலம்தான் தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஏமாற்றுவீர்கள்? என கேள்வி எழுப்பினார். கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வியை கொடுக்க சொன்னால் கஞ்சாவை கொடுக்கிறீர்கள். 24 மணி நேரமும் டாஸ்மார்க் மது விற்பனை. எதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு? என கேள்வி எழுப்பினார்.