கதர் நூல் மாலை அணிந்து பாஜக ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் பாஜக சார்பில் திமுக அரசு நெசவாளர்களை வஞ்சிப்பதாக கூறி கழுத்தில் கதர் நூல் மாலை அணிந்து கொண்டு நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் உள்ள காமராஜர் திடலில் திமுக அரசு நெசவாளர்களை வஞ்சிப்பதாக கூறி பாஜக மாநில நெசவாளர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் கழுத்தில் கதர் நூல் மாலை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இலவச வேஷ்டி சேலை ஒப்பந்தத்தை உள்ளூர் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களை ஒழுங்கு படுத்த வேண்டும், தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் நெசவாளர்களை வஞ்சிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் கண்டன பேருரை ஆற்றிய மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு தான் இரண்டு ஓட்டுகள் போடக்கூடிய வாய்ப்பு உள்ளது. உங்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் இந்த மாவட்டத்தினுடைய இரண்டு அமைச்சர்கள் பதவி இழக்க போகிறார்கள். எம்எல்ஏ பதவியே காலியாக போகிறது. கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இரண்டு அமைச்சர்களும் காலி. தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு சென்று விடுவார். கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தான் வசமாக மாட்டிக் கொண்டார். அவரது பதவி பறி போகப்போகிறது. நீதி வெல்லப்போகிறது. பாஜக மக்கள் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால் நிதி ஒதுக்கியதில் ஒதுக்குவது தான் திமுக. இந்திய நெசவாளர்களின் பிராண்ட் அம்பாசிடராக பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார் என பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.