கொலை செய்து சாக்கடையில் வீசப்பட்ட சிறுவன் சடலம் மீட்பு
மணலியில், அடித்து கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் வடிகாலில் வீசப்பட்ட, சிறுவன் உடலை போலீசார் மீட்டனர்.
சென்னை, மணலி, சின்னமாத்துாரைச் சேர்ந்த சங்கர் - தேவி தம்பதியின் மகன் சஞ்சய், 17. இரு தினங்களுக்கு முன், இவனது வீட்டிற்கு வந்த உறவினர்கள் தர்மா, பாபு ஆகியோர், சிறுவனை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த தாய், மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், தர்மா, பாபு ஆகியோர், பன்றியை திருடியதாக சஞ்சயை, கடப்பாரையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அவர் இறந்து விடவே, சாக்குமூட்டையில் கட்டி, மணலி, ஹரிகிருஷ்ணபுரம் சுடுகாடு அருகேயுள்ள, மழைநீர் வடிகாலில் வீசியதும் தெரிய வந்தது. வழக்கு, மணலி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, வடிகாலில் வீசப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் உடலை தேடினர். இந்நிலையில், நேற்று மதியம், மழைநீர் வடிகாலில் இருந்து சிறுவன் உடலை, போலீசார் மீட்டனர். பின், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தர்மா, பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.