உழவர் சந்தையில் செல்போன் திருடிய சிறுவன்
குடியாத்தம் உழவர் சந்தையில் செல்போன் திருடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் ராபின்சன் குளக்கரை பகுதியில் உழவர் சந்தை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய் கறிகளை வாங்கி செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் செல்போன்களை திருடிசென்று வருகின்றனர்.
இது குறித்து செல்போன்கள் பறிகொடுத்த விவசாயிகள், பொதுமக்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் காய்கறி வாங்க வந்த நபர் ஒருவர் கடையில் குனிந்து காய்கறிகள் எடுத்தபோது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை 15 வயது சிறுவன் எடுத்துள்ளான். இதை பார்த்த கடைக்காரர்கள், மற்றும் பொதுமக்கள் அந்த சிறுவனை பிடித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த சிறுவன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும், உறவினர்களுடன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளான். ஆனால் அப்படி யாரும் சிகிச்சைக்காக வரவில்லை என கூறப்படுகிறது.