பிரதான குழாயில் உடைப்பு - காஞ்சியில் வீணாகும் குடிநீர்
யதோக்தகாரி சன்னிதி தெருவில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைந்து சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் சன்னிதி தெருவில் நிலத்தடியில், புதைக்கப்பட்ட குழாயில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, கொப்பளித்து வெளியேறிய குடிநீர், திருக்கச்சிநம்பி தெரு வரை சிறு ஓடைபோல வழிந்தோடியது.
இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரம் விரயமாவதுடன், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. எனவே, யதோக்தகாரி சன்னிதி தெருவில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.