மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரப்பேட்டை அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது;
Update: 2023-10-30 03:28 GMT
விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் அடுத்த, காரப்பேட்டை அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது: மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, முன்கூட்டியே மார்பக புற்றுநோய் கண்டறிய வேண்டும். பொதுவான புற்றுநோயில், 14 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. கடந்த ஆண்டு, 614 பெண்களுக்கு மார்பக ஊடுகதிர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு, செப்டம்பர் மாதம் வரையில், 1,715 நோயாளிகள் மார்பக ஊடுகதிர் பரிசோதனை செய்து உள்ளனர். கடந்த 2018ல் சிகிச்சை பெற்ற, 2,194 புற்றுநோயாளிகளில், 354 மார்பக புற்றுநோயாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதில், கடந்த ஆண்டு மட்டும், 423 மார்பக புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,886 மார்பக புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். எனவே, பெண்கள் மார்பக பரிசோதனை செய்ய ஊக்குவிப்பதன் வாயிலாக, மார்பக புற்றுநோய் இல்லாத நிலைஉருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.