தொடர் மழையால் முடங்கிய செங்கல் சூளைகள்; தொழிலாளர்கள் வேதனை
தொடர் மழை காரணமாக காப்பிகாடு, ஞரான்விளை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகளில் பணிகள் பாதிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
குமரியில் பிரதான தொழிலாக கருதப்படும் செங்கல் சூளை தொழில் குறிப்பாக ஞாறான்விளை, காப்பிகாடு,அதங்கோடு திருவட்டார்,ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் உள்ளன.இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி புரிந்து வருகின்றனர். இந்த செங்கல் சூளைகளில் தற்போது உள்ளூர் தொழிலாளர்களை விட ஒடிசா, மேற்கு வங்காளம், மராட்டியம் உள் ளிட்ட வட மாநில தொழிலாளர்களே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்காக அந்தந்த செங்கல்சூளைகளில் கொட்டகை அமைத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.இந்த தொழிலை நம்பித் தான் அவர்கள் உள்ளனர். இந்தநிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் செங்கல்சூளைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செங்கல்கள் சேதமடைந்தன. எனவே தொழிலாளர்களின் வேலை பாதிப்பு மட்டுமின்றி உரிமையாளர்களுக்கும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.