தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம்

தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பு இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் நடைபெற்றது,

Update: 2024-04-16 07:16 GMT

ஆட்சியர் கற்பகம் 

 தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விளக்கக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தபோது, பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நாளுக்கு 72 மணிநேரம் முன்னதாக, ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும், முதன்மை முகவர் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனமும், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனுமதி கோரும்பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.

வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. மேலும் தேர்தல் நாளுக்கு 48 மணிநேரம் முன்னதாக, அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அலுவலர்கள் நன்கு தெரிந்துகொண்டு அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், சார் ஆட்சியர் கோகுல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்வைத்தியநாதன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News