ஆலங்குளத்தில் கத்தரிக்காய் விலை சரிவு
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் கத்தரிக்காய் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கடந்த வாரம் ரூ.150 வரை விற்பனையான கத்தரிக்காய் விலை ரூ. 30 ஆக குறைந்துள்ளது. பல வண்ணங்களில் கத்தரிக்காய் இருந்தாலும் ஆலங்குளம் பகுதியில் விளையும் வெள்ளை கத்தரிக்காய்க்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தனி மவுசு உண்டு.
ஆலங்குளம் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் கத்தரிக்காய் மூட்டைக்கு விலை நிா்ணயம் செய்த பின்னரே மற்ற காய்கனிகளின் விலை நிலவரம் முடிவு செய்யப்படும். இந்நிலையில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், கடந்த சில வாரங்களாக கத்தரிக்காய் கிலோ ஒன்றுக்கு விலை ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனையானது.
தற்போது சில தினங்களாக ஓரளவு வெயில் அடித்து வருவதால் கத்தரிக்காய் வரவு சற்றே அதிகரித்துள்ளது. இதனால் விலையும் வெகுவாகக் குறைந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 30 முதல் ரூ. 40 வரை தரத்திற்கேற்ப இன்று விற்பனை செய்யப்பட்டது.