விடுதியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பிடெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-06-25 14:48 GMT

கோப்பு படம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த பாலாஜி - பிரேமா தம்பதி. பாலாஜி மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் 19 வயதான தாரணி. இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அறையின் ஜன்னலில் தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தனியார் பொறியியல் கல்லூரி முன்பு இறந்துபோன தாரணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவியின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் கூறியபோது, நேற்று மதியம் எனது மகளை நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.நான் நேற்று மாலை 4:30 மணிக்கு கல்லூரிக்கு வந்து விட்டேன் விடுதி வாடனிடம் எனது மகள் குறித்து கேட்டபோது அவர் வெளியே சென்றுள்ளார் சற்று நேரத்தில் வந்து விடுவார் என இரண்டு மணி நேரம் காக்க வைத்தனர். பின்பு போலீசாரும் ஆம்புலன்ஸ் வந்தவுடன் தான் எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவலை தெரிவித்தனர். ஆனால் எனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

அவரது சாவில் மர்மம் இருக்கிறது. நடந்த சம்பவத்தை பார்க்கும்போது விடுதி ஜன்னலில் தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளனர். எனது மகள் சாவிற்கு உரிய நீதி விசாரணை வேண்டும். கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் போலீசார் கைப்பற்ற வேண்டும். நீதிபதியோ அல்லது வழக்கறிஞர் பார்வையில் எனது மகள் பிரேத பரிசோதனை நடக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News