பழுதாகி நின்ற லாரிமீது பேருந்து மோதி விபத்து - பெண் உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம்
விபத்துக்குள்ளான பேருந்து
சோழபுரம் கிராமத்திற்கு அருகேயுள்ள சாலை வளைவில் திருப்பத்தூர் பகுதியிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி வந்த லாரி பழுதாகி நின்றுள்ளது. அதேவேளையில் திருப்பத்தூரிலிரிந்து தனியார் பேருந்து ஒன்று சுமார் 40க்கும் மேற்பட்ட பயனிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி வந்துள்ளது. பேருந்தை பாஸ்கரன் என்கிற ஓட்டுநர் இயக்கிவந்துள்ளார். நடத்துனராக கருப்பையா என்பவர் உடனிருந்துள்ளார். பேருந்து ஒக்கூர் பகுதியை தான்டியதும் அதிக மழை பெய்ததாக கூறப்படுகிறது. இதில் நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் ஓட்டுநர் நிலை தடுமாறி மோதவே பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர், நடத்துனர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் அதே நேரத்தில் பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்று பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும், அவ்வழியாக வந்த வாகனங்கள் மூலமாகவும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மதகுபட்டி கூட்டுறவு வங்கியில் தங்கநகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்துவரும் ஜெயப்பிரியா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சாலையில் பழுதாகி நின்ற லாரி பின்னால் அடுத்தடுத்து பேருந்து, கார் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.