காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பஸ் நேர அட்டவணை அமைப்பு
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பஸ் நேர அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.;
பேருந்து நேர அட்டவணை அமைப்பு
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி, விழுப்புரம், பெங்களூரு, திருத்துறைப்பூண்டி, சேலம், புதுச்சேரி, தஞ்சாவூர், சித்துார், மதுரை, மன்னார்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தொலை துாரங்களுக்கும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் 250க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணை முழுமையாக இல்லாததால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர், நேரகாப்பாளர் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது. இதனால், பயணியரின் வசதிக்காக பேருந்து கால அட்டவணை குறித்து, தகவல் பலகை அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் சார்பில், பயணியரின் வசதிக்காக,
சென்னை மற்றும் நகர பேருந்துக்கான நேர காப்பாளர் அலுவலகம் அருகில், பேருந்து புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணை குறித்த தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் பேருந்து காலஅட்டவணையை பயணியர் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகைக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.