சேலம் சரகத்தில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து சேலம் சரகத்தில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் பொன்முடி தெரிவித்தார்.

Update: 2024-01-09 10:14 GMT

பேருந்துகள் இயக்கம் 

 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறும் போது, ‘சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 1,900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில் இன்று  அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடும். கூடுதலாக டிரைவர்கள், கண்டக்டர்கள் வரவழைக்கப்பட்டு எப்போதும் போல பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம்’ என்றார்.
Tags:    

Similar News