பசுமைகுடில் அமைக்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
பசுமை குடில் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்
கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பசுமை குடில் அமைத்து காய்கறி மற்றும் கீரைகள், மலர் வகைகளை பயிரிட்டு தங்கள் வருவாயை பெருக்கி கொள்ளும் நோக்கில் பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொங்கணாபுரம் வட்டாரத்தில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து காய்கறி வகைகளை சாகுபடி செய்திட ரூபாய் 4.67 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இப்பகுதி விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் பசுமை குடில் அமைத்து பல்வேறு வகையான காய்கறிகள், கீரை வகைகள், வெள்ளரி, குடை மிளகாய், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் வகைகளை பயிரிட்டு பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 8903606234 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கொங்கணாபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.