பல்லடம் அருகே நடந்த படுகொலை: நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்
பல்லடம் அருகே நடந்த 4 பேர் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார்,மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தனது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் போலீசார் செல்லமுத்து, ஐயப்பன், குட்டி என்கின்ற வெங்கடேஷ், சோனை முத்தையா செல்வம், மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வெங்கடேஷ் என 6 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர்.குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கள்ளக்கிணறு கொலை குற்றவாளிகள் 6 பேரையும் காவல்துறையினர் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்பு ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தொடர் விசாரணை வழக்காக எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கபட உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் மாவட்ட குற்ற துறை வழக்கறிஞர் கனகசபாபதி வாதாடினார்.