தொடந்து தாக்கப்படும் கால்நடைகள் - சிறுத்தையை விரைந்து பிடிக்க கோரிக்கை
நெல்லித்துறை பகுதியில் தொடர்ந்து கால்நடைகளை தாக்கி கொல்லும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை காரமடை அருகே நெல்லித்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அடிக்கடி இருப்பதாகவும் இதனை பிடிக்க வனத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பாதிக்கபட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் விவசாயம் செய்வதோடு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.பூதப்பள்ளம் பகுதியில் சுப்ரமணியம் என்பவர் தனது தோட்டத்தில் ஐந்து ஆடுகள் வளர்த்து வரும் நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஆடுகளை தாக்கி அதில் ஒரு ஆட்டை கழுத்தை கடித்து இழுத்து சென்றுள்ளதாக புகார் அளித்துள்ளார். சிறுத்தையால் கால்நடைகள் பலமுறை தாக்கபடுவது தொடர் கதையாகி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி பலமுறை வனத்துறையினரிடம் மனு அளித்தும் எவ்வித முயற்சியும் எடுக்கபடவில்லை என குற்றம் சாட்டியவர்கள் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்னர் சிறுத்தை பிடிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.