மாட்டுச் சந்தையில் அடிப்படை வசதிகள் வேணும் !

ஊத்தங்கரை மாட்டுச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-15 14:32 GMT

ஊத்தங்கரை மாட்டுச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஊத்தங்கரையில் பேருந்து நிலையம் பின்புறம் நடைபெறும் மாட்டு சந்தையில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாட்டுச் சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு கேரளா கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த கால்நடை வியாபாரிகளும், தமிழகத்தின் உள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகளும் கால்நடைகளை விற்க, வாங்க வந்து செல்கின்றனர். இந்த மாட்டுச்சந்தைக்கு காளைகள், கன்றுகள், பசுக்கள் என அனைத்து வகையான மாடுகளும் சராசரியாக வாரந்தோறும் 700 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மாடு ஒன்றுக்கு ரூ.100 முதல் 150வரை கேட் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும் இந்த சந்தையில் போதிய அடிப்படை வசதிகளே செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, வந்து செல்லும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு போதிய குடிநீர் வசதி கூட செய்யப்படவில்லை என்பது மிகவும் பரிதாபமான விசயமாக உள்ளது. மேலும், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், வாகனங்கள் வந்து செல்வதற்கான இடவசதி, போதிய கடைகள் அமைக்க வேண்டும்.

உரிய முறையில் சுகாதாரத்தை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளுக்கு தண்ணீர் வசதி, மாடுகளை ஏற்றி இறக்க போதிய தளம் அமைப்பது, திடீரென மாடுகளுக்கு ஏற்படும். காயம், உடல்நலக்குறைபாடுகளை கண்காணிக்க கால்நடை மருத்துவ குழு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வாரம் நடந்த வாரச்சந்தைக்கு காளைகள், மாடுகள், கன்றுகள் என சுமார் 700க்கும் மேல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கன்றுகள் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும், காளைகள், மாடுகள் சுமார் ரூ.30ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும் இந்த சந்தைக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும், கால்நடைகள், விவசாயிகள்,வியாபாரிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, கூடுதல் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News