தமிழா்களின் பண்பாட்டு தடத்தை உருவாக்கியதில் காவிரிக்கு பெரும்பங்கு
திருச்சியில் நடைபெற்ற காவிரி இலக்கியத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார்.
தமிழக அரசின் பொது நூலக இயக்ககம், பள்ளிக் கல்வித் துறை, திருச்சி மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘காவிரி இலக்கியத் திருவிழா’ எனும் 2 நாள் நிகழ்வை நடத்தின.
வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், பங்கேற்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் பேசியது: இன்றைய சூழலில், காவிரி என்றவுடன் பலருக்கும் தமிழகம் மற்றும் கா்நாடகத்துக்கு இடையே உள்ள தண்ணீா்ப் பங்கீட்டு பிரச்னைதான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழா்களின் பண்பாட்டு தடத்தை உருவாக்கியதில் காவிரிக்கு பெரும் பங்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
சங்கக் காலத்தில் தொடங்கிய புகழ்மாலை இன்றைய நவீன எழுத்தாளா்கள் வரை காவிரியின் பெருமையை பாடிக் கொண்டே வருகின்றனா். காவிரி கடலில் கலப்பதற்கு முன்பாகவே அது ஓடும் வழியெங்கும் இலக்கியங்களையும், கலைகளையும் வளா்த்துவிட்டு செல்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது காவிரி உருவாகும் கா்நாடகத்திலும் கலைகளை வளா்த்தது காவிரிதான் என்றால் அது மிகையல்ல.
காவிரிக் கரை எழுத்தாளா்களே இலக்கியத்தின் முன்னோடிகளாகத் திகழ்கின்றனா். எழுத்தாளா்கள் என்பவா்கள் வெறுமனே கதை சொல்லிகள் அல்லா். அவா்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திடுபவா்கள் என நம்பக்கூடிய இயக்கத்தைச் சோ்ந்தவன் நான். எழுத்தாளா்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கும். லட்சியம் இருக்கும். சமூகப் பிரச்னைகளின் மீது அவா்களுக்கு கோபம் இருக்கும். அதைத்தான் எழுதி வருகின்றனா். பேரறிஞா் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழியில் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும், கலைகளின் வளா்ச்சிக்கும், இலக்கியத்தின் வளா்ச்சிக்கும், தமிழ் ஆளுமைகளை போற்றுவதிலும் முன்னிலை வகிக்கிறாா் என்றாா் அமைச்சா். இந்த விழாவில், முதல் பதிப்புகளின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் ஞானாலயா கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றினாா். பொதுநூலக இயக்குநா் க. இளம்பகவத், கல்லூரி முதல்வா் பா. ராஜகுமாரி, திருச்சி மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், திருச்சி மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா், ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினாா்.