காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத் தீர்மான நகலை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-06 08:10 GMT
விவசாயிகள் போராட்டம்

மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். பின்னர், ஆட்சியரக வாயில் முன் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் மேக்கேதாட்டு அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் தீர்மான நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பாண்டியன் தெரிவித்தது: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்து கூட்ட நிகழ்வில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்புக்கு தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.

அதில், அணை கட்டுவது குறித்து சாதக, பாதகங்கள், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்துகளைக் கேட்டறிவது தொடர்பாகவும் சேர்த்து, கூட்ட தீர்மானமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது, முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது. காவிரி மேலாண்மை ஆணையம் தனது அதிகார வரம்பையும் மீறி உள்ளது. இது, தமிழக நலனுக்கு எதிரானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைச்சரவையை நடத்தி, ஆணையத்தின் முடிவை சட்ட விரோதம் என அறிவித்து,

மத்திய அரசு ஏற்கக்கூடாது என தீர்மானிக்க வேண்டும் என்றார் பாண்டியன். இப்போராட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ். வீரப்பன், மாநில இளைஞரணி செயலர் மகேஸ்வரன், கெüரவத் தலைவர் ஆர். திருப்பதி வாண்டையார், வடக்கு மாவட்டச் செயலர் பாட்ஷா ரவி, மாநகரத் தலைவர் காமராஜ், செயலர் அறிவு, அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News