திருக்குவளை தலைஞாயிறை அடைந்த காவிரி - ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தலைஞாயிறு பகுதியில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்தடைந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டார்.

Update: 2024-02-14 09:45 GMT

ஆட்சியர் ஆய்வு 

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெண்ணாறு பாசனத்திற்கு உட்பட்ட அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு, முல்லியாறு வெள்ளையாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசனம் பெறும் சம்பா / தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள 138 கிராமங்களில் உள்ள 96480.45 மொத்த ஏக்கர் பரப்பளவில், 17390 ஏக்கர் பரப்பளவிற்கு தண்ணீரின் தேவையைப் பொருத்து மேட்டூர் அணையிலிருந்து 03.02.2024 அன்று திறந்துவிடப்பட்ட தண்ணீரை 09.02.2024 முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சரியான முறையில் விவசாயிகளுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 11.02.2024 வரை 8559 ஏக்கர் பரப்பளவிற்கு தண்ணீர பாய்ச்சப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 8831 ஏக்கர் பரப்பிற்கு 14.02.2024-க்குள் பாசனம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருக்குவளை, ஏர்வைக்காடு வெள்ளையாறு இயக்கு அணை, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி, ஓடச்சேரி, நத்தப்பள்ளம், வடுவூர் ஆகிய பகுதிகளில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட பாசனப்பரப்புக்கு தேவைப்படும் தண்ணீர் வந்தடைந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

மேலும் கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் விவசாய பகுதிகளுக்கு உரிய முறையில் சென்றடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கமலக்கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர்(பொ)தேவேந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News