கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை நியாயமல்ல -துரை வைகோ

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், மலிவான அரசியலுக்காக சிபிஐ விசாரணை கோருவது நியாயமல்ல என துரைவைகோ கூறினார்.

Update: 2024-06-24 09:04 GMT

 பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஜெயசீலன் மகள் திருமண விழா நடைபெற்றது இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பெரம்பலூருக்கு வந்திருந்தார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், மணமக்கள் சிக்கனத்துடன் வாழ வேண்டும் என்றும், வளர்ந்து வரும் தொழில்களில் முதலீடு செய்து சேமிப்பை பலப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாக குடும்பத்தை கொண்டு செல்ல இயலும் என்றும் கூறி வாழ்த்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, துரை.வைகோ கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும், உயிரிழந்தவர்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழக அரசும் காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் போதிய உதவிகளை செய்து வருகின்றார்கள். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தேவையற்ற கருத்துக்களையும் சொல்வது மலிவான அரசியல் என்று கூறினார். சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,

முன்னாள் நீதிபதியை கொண்டு தனி நபர் ஆணையம் உருவாக்கப்பட்டு விசாரணையை துவங்கி உள்ளது. தவறு செய்த அதிகாரிகளுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள், அவருக்கு உதவியாக இருந்தவர்கள் அனைவரையும் தமிழாக அரசு கைது செய்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முதல் சம்பவமோ அல்லது ஒற்றை சம்பவமோ கிடையாது. கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற கள்ளச்சாராய சாவுகள் தொடர்கதையாகி வருகிறது. இது மட்டுமின்றி இதேபோல வடமாநிலத்தில் குஜராத், பீகார் உள்ளிட்ட பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களிலும் நாட்டையே உலுக்கிய கள்ளச்சாராயம் சாவுகள் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஏற்கனவே இதே போல கள்ளச்சாராய வழக்கில் சிறை சென்று மீண்டு வந்தவர்.

அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. அவருக்கு பல்வேறு அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் உதவி செய்துள்ளார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று கள்ளச்சாராயம் மட்டுமல்ல போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள், துணை நிற்பவர்கள் என்று, அனைவரையும் கைது செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.

அதிகபட்சமாக மரண தண்டனை கூட வழங்கலாம் தப்பில்லை என்றார். இதுபோன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒருங்கிணைக்க வேண்டும். மாறாக அரசியல் ஆதாயம் தேடுவது தவறானது என்று கூறினார். இந்நிகழ்ச்சியின் போது மதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News