நீலகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-04-11 12:53 GMT

 சிறப்பு தொழுகை

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்பை கடைபிடிக்கும் புனித ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மாதங்களில் 9-வது மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலும் இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினர். இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டது. நீலகிரியில் நேற்று கூடலூர், பந்தலூர் பகுதிகளில், கொண்டாடப்பட்டது. இன்று ஊட்டி பெரிய பள்ளி வாசல், பெடரேஷன் பள்ளி வாசல், பிங்கர் போஸ்ட், மேரீஸ் ஹில் பள்ளி வாசல் என, அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. குன்னூர் சின்ன பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைகள் நடந்தன.

குன்னூர் மோர்ஸ்கார்டன் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. கோத்தகிரி பஜாரில் உள்ள பெரிய பள்ளி வாசலில், உலக அமைதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மேம்பட, சிறப்பு தொழுகை நடந்தது. மதரஸா ஜூம்மா பள்ளி, கூக்கல்தொரை, அரவேனு கட்டபெட்டு, மஞ்சூர் பள்ளி வாசல்களில் இமாம்கள் தலைமையில், தொழுகை நடந்தது. முன்னதாக விழாவையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவர்களும், பெரியவர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags:    

Similar News