சேலம் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதியிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 27). இவர் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி அஜித்குமாரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கிடையே அவர் சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் உத்தரவின்பேரில் சிறைக்காவலர்கள் கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு செல்போன், சிம் கார்டு, வயர் ஆகியவை இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் அஜித்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாருக்கு எவ்வாறு செல்போன் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.