சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி கொடியசைத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-06 06:14 GMT

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சேலம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகரப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அரசின் அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் கிடைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, சமூகத்தரவு தளத்தை உருவாக்கவும் இக்கணக்கெடுப்பு வழிவகை செய்கிறது. சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாகனம் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் என்ற மொபைல் செயலி மூலம் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தங்களது இல்லம் தேடி வரும் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி அவர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த கணக்கெடுப்பின்போது, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கணக்கெடுப்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும். இக்கணக்கெடுப்பு பணியானது மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட மேம்பாட்டிற்கும், எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மறுவாழ்வு பணிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் இக்கணக்கெடுப்பின்போது, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-11, மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம் என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி பேசினார்.
Tags:    

Similar News