தூத்துக்குடியில் முன்னாள் மாணவர் இயக்கத்தின் நூற்றாண்டுவிழா
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.;
கவுரவிப்பு
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்குச் சவேரியானா அதிபரும், முன்னாள் மாணவர் இயக்கத்தின் இயக்குநருமான ஆரோக்கியசாமி தலைமை வகித்தார்.
பள்ளியின் தாளாளர் அகஸ்டின் தலைமையாசிரியர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை ஜி.எஸ்.டி மத்திய கணக்குத்துறை முதன்மை ஆணையர் கென்னடி, மதுரை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிபதி கல்யாண மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றார்கள்.
முன்னாள் மாணவர் இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் மாணவர்களுக்கான ஐவர் கால்பந்தாட்டபோட்டியும், மாவட்ட அளவில் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான அமரர் விவிடி நினைவு சுழற்கோப்பைக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியும், முன்னாள் மாணவர்கள் பங்குபெற்ற கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, தடகளப்போட்டிகள், ஜனவரி மாதம் 7ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டன.
குடியரசு தின நாளில் தூத்துக்குடி மாநகர குழந்தைகள் ஏறத்தாழ 400 பேர் பங்குபெற்ற ஓவியப் போட்டியும் நடந்தது. மாநில அளவிலான மாராத்தான் போட்டியில் 150 பேர் பங்கு பெற்றனர். மேற்படி போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் மாணவர் இயக்கத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். ஆண்டறிக்கையைச் செயலர் இராஜசேகரன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளர் முகம்மது ஹயாஸ் சமர்ப்பித்தார். நூற்றாண்டு விழா மலரை தொழிலதிபரும் முன்னாள் மாணவருமான ஜோ பிரகாஷ் வெளியிட, வழக்குரைஞரும் முன்னாள் மாணவருமான ஜோசப் செங்குட்டுவன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், வீராங்கணைகள், மாணவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் நன்றி கூறினார்.
இணைச்செயலரும் ஆசிரியருமான நெய்தல் அண்டோ நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.