தட்டுப்பாடு இல்லாமல் சான்றுபெற்ற விதை நெல் - விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாய சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற விதை நெல்லை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-11-08 05:34 GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் 12 தாலுகாக்களில் நடந்தது. அதில், மாவட்ட அளவிலான அலுவலர் தலைமையில் வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டனர். அதன்படி, திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில், திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா தலைமையில் நடந்தது. அதில், வேளாண் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, பிடிஓ அருணாசலம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் குறைகள் விபரம்: திருவண்ணாமலை பகுதியில் பரவலான மழை பெய்து வருகிறது. எனவே, நீர்வரத்து மற்றும் பாசன கால்வாய்களை சீரமைத்துத்தர வேண்டும், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நிதி உதவி பெற்றுவந்த பல விவசாயிகளுக்கு, கடந்த சில தவணைகளாக உதவித்தொகை வரவில்லை. தேவையான ஆவணங்களை அளித்த பிறகும், தவணைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக பெற்றுத்தர வேண்டும். சம்பா பருவ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, அதிக மகசூல் தரும் சான்று பெற்ற விதைநெல் தட்டுப்பாடு இல்லாமல் வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும். தானிய ஈட்டுக்கடன் வழங்குவதற்காக கட்டப்பட்ட குடோன்களில் உரம் இருப்பு வைக்கின்றனர். எனவே, அதற்கென தனியாக குடோன் கட்ட வேண்டும். திருவண்ணாமலை தாலுகாவில் நடப்பு பருவத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி நடக்கிறது. எனவே, நெல் விளைச்சல் அதிகரிக்கும். அதனால், நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் தாமதம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
Tags:    

Similar News