செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக அருண்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டாா்.;
Update: 2024-01-30 07:18 GMT
செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக அருண்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு இவா் தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஆ.ர.ராகுல்நாத் சென்னை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டாா். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியா் அருண்ராஜுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சுபாநந்தினி பூங்கொத்து அளித்து வரவேற்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரனீத், கூடுதல் ஆட்சியா் (ப), திட்ட இயக்குநா் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பரணிதரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனா்.பின்னா், ஆட்சியா் அருண்ராஜ் கூறுகையில், செங்கல்பட்டு பெரிய மாவட்டம், ஏரிகள் நிறைந்த மாவட்டம், சுற்றுலா புகழ்பெற்ற மாவட்டம். 2015-இல் காஞ்சிபுரத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றியுள்ளேன். பழனி சப்-கலெக்டராகவும், தமிழக அரசின் நிதித் துறையிலும், எல்காட் நிா்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்த மாவட்டம் குறித்து நன்கு அறிவேன். மிக பழைமையான மாவட்டம் இது. மாவட்டத்தின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நேரடியாக அணுகி, தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம். குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றாா்.