வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-02-25 15:20 GMT
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேளச்சேரி, தொல்காப்பியர் பூங்கா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் அது குறித்து பேசியவர், மழைநீர் வடிகால் பணிகள் பல இடங்களில் முடிந்துள்ளன, சில பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடையும். தொல்காப்பியர் பூங்காவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் செய்ய நேரம் இது தான், டிசம்பர் மாத மழை, ஜனவரி மாத விழாக்கள் எல்லாம் முடிந்து பணிகள் நடந்து வருகின்றன. பருவமழை காலங்களில் சேதமடைந்த சாலைகள் டெண்டர் பணிகள் எல்லாம் முடிந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் தற்காலிகமாக சரி செய்யப்படும் பணிகள் முடிவடைந்துவிடும். பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் கொளப்பாக்கம் கெருகம்பாக்கம் ஆகிய மாநகரின் புறநகர் பகுதியில் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளின் தரம் ,ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பருவ மழை காரணமாக சேதாரம் ஆகிய சாலைகள் தற்போது முழு வீச்சில் புனரமைப்பு செய்யப்படுகின்றன. ஓரிரு மாதங்களில் முழுமையாக பணிகளை நிறைவு பெரும் வண்ணம் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் முறையாக சாலை பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.