கழிவுநீர் தொட்டி மீது குழந்தை வீச்சு
அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டி மீது பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-29 06:13 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் கழிவுநீர் தொட்டி உள்ளது. நேற்று காலை மருத்துவமனையின் உதவியாளர் இளையராஜா என்பவர் தண்ணீர் சுவிட்ச் போடுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது கீழே மூடப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியின் மீது ஏதோ அசைவது போன்று தெரிந்துள்ளது.மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தார். மூடப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியின் மீது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் தலை குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிருடன் இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனை நர்ஸ்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளனர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.குழந்தை அரசு மருத்துவமனையில் பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேறொரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இங்கு வந்து வீசி சென்றனரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையில் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்ச தாய் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.