சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழா!
சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குண்டம் இறங்கினார்கள்
Update: 2024-02-28 11:02 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழா கடந்த 16 ம்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி இருந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் இன்று அதிகாலை 60 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கினார்கள். முதலில் கோவில் பூசாரி கும்பத்துடன் குண்டத்தில் இறங்கினர். குழந்தைகள் ,பெண்கள், முதியவர் என பலரும் பூக்குழியில் இறங்கினார்கள். தீராத நோயை தீர்க்க வேண்டுதல் செய்து நோய் தீர்ந்தவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாமல் வேண்டுதல் செய்து அம்மன் அருளால் குழந்தை பேறு பெற்றவர்கள் என பலதரப்பினரும் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இது போல் குறைகள் உள்ளவர்கள் தங்கள் குறைகளை தீர்க்க அம்மனிடம் வேண்டுதல் செய்தும் தீ மிதித்தனர். தொடர்ந்து பெண்கள் ஓங்காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த குண்டம் திருவிழாவில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் மட்டுமல்லாமல் சேலம், கரூர், நாமக்கல்,ஈரோடு, குமாரபாளையம்,பரமத்தி வேலூர், என பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். வரும் மார்ச் 2ம் தேதி அம்மன் திருவீதி உலாவுடன் மாசிக்குண்டம் நிகழ்ச்சி நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்