சுசீந்திரம் கோவிலில் சித்திரை திருவிழா
சுசீந்திரம் கோவிலில் 7-ம் நாளில் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
Update: 2024-05-14 13:20 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் சித்திரை தெப்ப திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழாவை ஒட்டி தினமும் காலை மாலையில் சுவாமி வீதி உலா நடக்கின்றன. இன்று 14ஆம் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி காலையில் பல்லக்கில் சுவாமி வீதி உலா எழுந்தருளின . தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நாளை புதன்கிழமை எட்டாம் திருவிழாவை ஒட்டி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவிதி உலா, மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாள் சிவகாமி அம்பாளுக்கு அஷ்டபிஷேகம், இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. ஒன்பதாம் நாளான 16ஆம் தேதி காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. பின்னர் காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் முதல் தேரில் விநாயகர், அம்பாள் தேரில் சுவாமி மற்றும் அம்பாள், இந்திரன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, நள்ளிரவு 12 மணிக்கு சப்தா வர்ணம் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாதிக்கின்றனர். இதை அடுத்து நள்ளிரவு திரு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.