மின்சாரம் பாய்ந்து தேவாலய ஊழியர் பலி: டிடிவி தினகரன் ஆறுதல்
தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதி பொதுமக்கள் தங்கியிருந்த தேவாலயத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆலய ஊழியர் குடும்பத்தினருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 16-ந்தேதி முதல் 3 நாட்கள் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியது. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் அதிகனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தூத்துக்குடி பாத்திமா மாதா கோவில் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது மின்தடை ஏற்பட்டதால் ஆலயத்தில் உள்ள ஜெனரேட்டரை ஆன் செய்யும்போது மின்சாரம் தாக்கி ஆலய பணியாளரான செல்வன் ராபின்ஸ்டன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாத்திமா நகர் பகுதியில் பேரிடர் நிகழ்வின்போது மக்களை காக்கும் பணியில் தனது இன்னுயிரை நீத்த ரபிஸ்டன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாத்திமா நகர் மக்களுக்கான நிவாரண பொருட்களை பங்கு தந்தையிடம் வழங்கினார். முன்னதாக அவர் தூத்துக்குடி 3வதுமைல், ஸ்டேட் பேங்க் காலனி, ஆ.சண்முகபுரம், டேவிஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெருவெள்ளப் பேரழிவில் தத்தளித்த மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வுகளில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, மாவட்ட செயலாளர் பிரைட்டர், பகுதி செயலாளர் மதன்குமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.