மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்..!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக ஆட்சியரிடம் அளிப்பது வழக்கம். கடந்த இரு மாதங்களாகவே நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் நலத்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது
.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்திருந்தார். கடந்த இரு மாதங்களாக பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் தங்கள் மனுக்களை செலுத்தி இருந்த நிலையில், பல மனுக்களுக்கு மனுக்கள் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டு கைபேசியில் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. மக்களுக்கு இன்று முதல் நேரில் அளிக்கலாம் என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தது.
இரு மாதங்களுக்கு பிறகு நடைபெறுவதால் நேற்று காலை முதலே மக்கள் தங்கள் மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் துவங்கியது. பொதுமக்கள் மனுக்களை அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து அதற்கான விளக்கங்களையும் பெற்றனர். பட்டா மாறுதல், காவல்துறை பிரச்சனை, குடும்ப அட்டை கோருதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊழியர்கள் சம்பள உயர்வு கோருதல், சாலை வசதி கூறியது உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது.
மனுக்கள் அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மனுக்களை பெற்று அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய மனுக்களை அலுவலரிடம் அளித்து அவர்களுக்கு உரிய பயன்களை அளிக்குமாறு அறிவுரை கூறினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.