டாரஸ் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் !

 நிலத்தை நிரப்ப ஒரு டாரஸ் லாரியில் கிராவல் மண் கொண்டுவரப்பட்டது. இந்த லாரியில் ரயில்வே பணிக்காக என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் இப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-28 05:05 GMT

டாரஸ் லாரி

குமரி மாவட்டம் இரணியல் அருகே நான்கு வழி சாலை அருகில் மணக்கரை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தாமரைக்குளம், பூலங்குளம், சாத்தான்குளம், ஊத்திலிகுளம், வண்ணான்குளம், மாவடிகுளம், புதுக்குளம். செந்தாமரைகுளம், பாம்பாட்டிகுளம், சடச்சிக்குளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் நிரம்பிய மறுகால் வெள்ளம் அங்குள்ள ஆலங்காலில் வடிந்து குறிஞ்சிக்குளம் வழியாக வள்ளியாறு  சென்றடைகிறது. இதனிடையே இந்த பகுதியில் குறிப்பிட்ட ஒரு நிலத்தை மேடாக்குவதற்காக கிராவல்மண் பரப்பும் பணியை தனியார் ஒருவர் செய்து வருவதாக தெரிகிறது. இந்த தனியார்  நிலம் முழுமையாக நிரப்பப்பட்டால் மேற்படி நிலம் வழியாக வரும் நீர்வழி பாதை தடை செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து விடும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். நேற்று இந்த நிலத்தை நிரப்ப ஒரு டாரஸ் லாரியில் கிராவல் மண் கொண்டுவரப்பட்டது. இந்த லாரியில் ரயில்வே பணிக்காக என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதை அறிந்த இப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்த தகவல் கல்குளம் தாசில்தார் மற்றும் ஆர்ஐ, விஏஓவுக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த இரணியல் சப்‌. இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், ஆர்ஐ, விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தடை செய்யப்பட்ட நேரத்தில் டாரஸ் லாரி ஓட அனுமதித்தது யார்? ரயில்வே பணிக்கு கொண்டு வரப்பட்ட கிராவல் மண் தனியார் நிலத்திற்கு ஏன்? கொண்டு செல்லப்பட்டது என மக்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். இரவு வரை பேச்சுவார்த்தை நடந்தும் போலீசார் வழக்குப் பதிவு எதுவும் செய்யாமல் லாரி டிரைவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் இரவு வரை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News