பழுதான அரசு பேருந்தை தள்ளிச் சென்ற பொதுமக்கள்
சீர்காழியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பழுதடைந்த அரசு பேருந்து நடுவழியில் நின்றதால் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பேருந்தை தள்ளிச் சென்றனர்க்ஷ
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனை சார்பாக சீர்காழியில் இருந்து ஆளக்குடி வரை 9 ஏ என்கிற நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து அளக்குடி சென்று விட்டு மீண்டும் சீர்காழி வந்து கொண்டிருந்தது.
சீர்காழி பேருந்து நிலையத்திற்கு முன் கச்சேரி சாலையில் அமைந்துள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய பேருந்து அங்கேயே நின்று போனது. பேருந்தை இயக்குவதற்கு எவ்வளவோ முயன்றும் தற்காலிக ஓட்டுனரால் பேருந்தை எதுவும் செய்ய முடியவில்லை. பழுதடைந்த பேருந்து மேற்கொண்டு இயக்க முடியாமல் பேருந்து ஓட்டுநர் தவித்தார்.
இந்நிலையில் இருபுறமும் பேருந்துகளும், வாகனங்களும் சூழ்ந்து நகர் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை உதவிக்கு அழைத்து பழுதடைந்த அரசு பேருந்தை தள்ளிச் சென்றனர்.
வேகமாக தள்ளிவிடப்பட்டதால் பேருந்து மீண்டும் இயங்க துவங்கியது.இதனையடுத்து பேருந்து நிலையத்திற்கு சென்று காத்திருந்த பயணிகளை அழைத்துக்கொண்டு மீண்டும் அளக்குடி நோக்கி பேருந்து புறப்பட்டு சென்றது.