சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-07 06:12 GMT
தஞ்சை மாநகராட்சியில், தீபாவளி பண்டிகைக் கால தற்காலிக கடை அமைக்க கடைக்கு தலா 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணம் பெறும் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாக சாலை ஓரங்களில் பிழைப்பு நடத்தி வரும் ஆட்டோ மற்றும் தரைக்கடை சிறு வியாபாரிகளை தனிநபர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தீபாவளிக்கு பிறகு சாலையோர சிறுகடைகள் மற்றும் ஆட்டோக்களை போட விடமாட்டோம் என்று மிரட்டும் போக்கை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட சிஐடியு சாலையோர சிறு கடை வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தஞ்சை ரயிலடியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர்பிரபு தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் த.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் சா.செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்டத் துணைத் தலைவர் கே.அன்பு, மாவட்ட துணை தலைவர் இ.டி. எஸ்.மூர்த்தி, ஆட்டோ சங்கம் மாநகரச் செயலாளர் ஏ.ராஜா, துணைத் தலைவர் செல்வம், காதர் உசேன், தரைக்கடை சங்க நிர்வாகிகள் பாண்டியன், சார்லஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில செயலாளர் சி. ஜெயபால், "ஆண்டாண்டு காலமாக தரைக்கடை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை, ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் பெயரைச் சொல்லி, சிலர் கடையை போட விடாமல் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக வந்தவர்களிடம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு தீபாவளி தரைக்கடை போட அனுமதிக்கின்றனர். இதை தட்டிக் கேட்பவர்களை தீபாவளி முடிந்து நீங்கள் இங்கு கடை போட முடியுமா, ஆட்டோவை நிறுத்த முடியுமா என்று மிரட்டுகின்றனர். இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.